Published : 01 Jun 2021 05:59 PM
Last Updated : 01 Jun 2021 05:59 PM

புதிய ரயில் பாலத்திற்காக பவளப்பாறைகளை சேதப்படுத்துவதா? பாம்பனில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதிய ரயில் பாலத்திற்காக பவளப்பாறைகளை சேதப்படுத்துவதாகக் கூறி பாம்பன் பாலத்தில் மதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய ரயில்வே சார்பில் பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 1.3.2019 அன்று பிரதமர் மோடி கானொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து 11.08.2019 அன்று பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்காக பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின. இதற்காக இரும்பு மிதவைகளில் கிரேன், கலவை எந்திரங்கள், பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை அகமதாபாத்தை சார்ந்த எம்.எஸ்.ரஞ்சித் பில்ட்கான் லிமிடெட் மேற்கொண்டு வருகிறது.

ரயில்வே நிர்வாகம் இரண்டு வருடத்திற்குள் அதாவது செப்., 2021க்குள் புதிய ரயில்வே பாலத்தின் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்து இருந்தாலும் இதுவரையிலும் சுமார் 20 சதவீதம் மட்டுமே புதிய பாலத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் பாம்பன் சாலைப் பாலத்தில் செவ்வாய்கிழமை மதிமுக சார்பாக புதிய ரயில் பாலத்திற்காக பவளப்பாறைகளை சேதப்படுத்துவதாகக் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட மதிமுக பொருப்பாளர் பேட்ரிக் தலைமை வகித்தார், மாநில மீனவரணி துணைசெயலாளர் சின்னத் தம்பி முன்னிலை வகித்தார்.

பாம்பன் கால்வாயில் கற்களை கொட்டி தடுப்பணை கட்டி கட்டுமானத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும் இதனால் பாம்பன் கால்வாயில் கடல் நீரோட்டங்கள் பாதிக்கபட்டுள்ளன எனவும் மேலும் கட்டுமானப் பணிகளுக்காக பாம்பன் கடலுக்குள் உள்ள பவளப்பாறைகளை உடைக்கப்படுகிறது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x