காட்டாற்றில் தூர்வாரும் பணி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

காட்டாற்றில் தூர்வாரும் பணி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம் நவல்பட்டு கிராமத்தில் காட்டாற்றில் ரூ.10 லட்சம் மதிப்பில் 1.6 கி.மீ. தொலைவுக்குத் தூர்வாரும் பணியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.

காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிக்காகத் திருச்சி மண்டலத்தில் 589 பணிகளுக்கு ரூ.62.905 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் 58 பணிகளுக்கு ரூ.2.2 கோடிக்கும் தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள், வாய்க்கால்கள், பிரிவு வாய்க்கால்களில் உள்ள முட்செடிகளை அகற்றி தூர்வாருவதன் மூலம் பாசனத்துக்குக் கடைமடை வரை தண்ணீர் எளிதாகச் சென்று சேரும்.

இந்தச் சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் 63 பணிகள் ரூ.5.623 கோடியில் 162.81 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாகத் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் நவல்பட்டு கிராமத்தில் உள்ள காட்டாற்றில், குண்டூர் - நவல்பட்டு 100 அடி சாலையின் கீழ்ப் பகுதியில் நெடுகை 9200 முதல் 10800 வரை (1.6 கி.மீ. தொலைவுக்கு) ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி இன்று தொடங்கியது.

திருவெறும்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார்.

சூரியூரில் உப்பாறாகத் தொடங்கி சோழமாதேவி உய்யகொண்டான் வாய்க்காலில் கலக்கும் காட்டாற்றில், இந்தப் பகுதி தூர்வாரப்படுவதன் மூலம் அண்ணாநகர், கும்பக்குடி ஆகிய பகுதிகளில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதும், அதன் மூலம் வெள்ள பாதிப்பு நேரிடுவதும் தவிர்க்கப்படும் என்று பொதுப் பணித்துறை அலுவலர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in