

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், பொது அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். தற்போது 1,900-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இதில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கரோனா தொற்று மற்றும் அறிகுறியுடன் 700 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையடுத்து பொது அறுவை சிகிச்சை வார்டுகள் உட்பட அனைத்து வார்டுகளும் கரோனா தொற்று மற்றும் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோர் வார்டுகளாக மாற்றப்பட்டன. அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள மருத்துவர்கள் கரோனா பணிக்கு மாற்றப்பட்டனர். வார்டுகள் இல்லாததால் மற்ற உள் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. மேலும், பொது அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘அவசரமாகச் செய்யக் கூடிய குடல் வால்வு, கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன. தள்ளிப் போடக்கூடிய அறுவை சிகிச்சைகளைச் செய்வதில்லை. தொடர்ந்து புற நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. அவசியம் உள்ளவர்கள் புற நோயாளிகள் பிரிவு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்’’ என்று தெரிவித்தனர்.