குன்னத்தூரில் சோகம்: ஒரே குடும்பத்தில் 4 பேர் கரோனாவால் அடுத்தடுத்து உயிரிழப்பு

குன்னத்தூரில் சோகம்: ஒரே குடும்பத்தில் 4 பேர் கரோனாவால் அடுத்தடுத்து உயிரிழப்பு
Updated on
1 min read

குன்னத்தூர் அருகே கரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் அருகே வெள்ளரவெளியைச் சேர்ந்தவர் நடராஜ் மகன் தெய்வராஜ் (42). கடந்த மாதம், கோவையில் உள்ள உறவினர் துக்க நிகழ்வுக்குச் சென்று வந்துள்ளார். இதையடுத்து அவர் கரோனா பாதிப்புக்குள்ளாகி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, இவரது மனைவி சாந்தி (35) கரோனா பாதிப்பிற்குள்ளாகி ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். இதேபோல் பாதிப்புக்குள்ளான தெய்வராஜின் மூத்த சகோதரர் ராஜா (50) ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் தெய்வராஜின் மற்றொரு அண்ணன் சவுந்தரராஜன் (45) திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கரோனா பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மக்கள் சமூக நிகழ்வுகளுக்கும் வெளியிடங்களுக்கும் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in