

திருப்பூரில் முதல்வருக்குப் புத்தகங்கள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
மாநிலத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் முதல்வர் வருகையை ஒட்டி வந்திருந்த அனைவரும், கட்டுக்கட்டாகப் புத்தகங்களைத் தந்து முதல்வரை வரவேற்றனர். யாருமே சால்வை, மாலை உள்ளிட்ட எதையும் தந்து அவரை வரவேற்கவில்லை. அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட பலரும், புத்தகங்கள் தந்து அரசு விழாவில் முதல்வரை வரவேற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தன்னைச் சந்திக்க வருபவர்கள் புத்தகம் கொடுத்தால் போதும், பூங்கொத்து கொடுக்க வேண்டாம் என அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.