

காரைக்கால் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (மே 20) தொடங்கப்பட்டது.
காரைக்கால் நேரு நகர் பகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் மட்டுமே இவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்று இம்மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் தடுப்பூசி போடும் பணியை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தொடங்கி வைத்தார். மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் கே.மோகன்ராஜ் உடனிருந்தார்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. காலை 9 முதல் மாலை 5 மணி வரை இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழக்கம் போல மாவட்டத்தில் உள்ள 13 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.