

அரியலூர் அருகே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள இடையகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (55). இவர், 1988ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் கொளஞ்சிநாதனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குப் பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கொளஞ்சிநாதன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.
இங்கு சிகிச்சை பெற்று வந்த கொளஞ்சிநாதன் சிகிச்சைப் பலனின்றி நேற்று (மே 16) மாலை உயிரிழந்தார். உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமன்றி காவல்துறையினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.