சிவகங்கையில் ஒரே இடத்தில் காய்கறி வியாபாரிகள் குவிந்ததால் நெரிசல்: அப்புறப்படுத்திய அதிகாரிகளிடம் வாக்குவாதம்

சிவகங்கை பேருந்துநிலையத்தில் நடந்த சந்தை.
சிவகங்கை பேருந்துநிலையத்தில் நடந்த சந்தை.
Updated on
1 min read

சிவகங்கையில் ஒரே இடத்தில் காய்கறி வியாபாரிகள் கடைகள் அமைத்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அனுமதியில்லாத கடைகளை அப்புறப்படுத்திய நகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.

சிவகங்கையில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை நடக்கும். கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி சந்தையில் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து தினசரி சந்தைக்கும் நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.

மேலும் சிவகங்கை பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் தினசரி சந்தை நடத்த நகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் நேற்று பேருந்து நிலையத்தில் ஐம்பது கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தநிலையில், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அமைத்தனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த நகராட்சி ஆணையர் அய்யப்பன் தலைமையிலான அதிகாரிகள், அனுமதியின்றி கடைகளை அமைத்த வியாபாரிகளை அப்புறப்படுத்தினர்.

இதனால் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து நிலையம் எதிரேயும், நகரின் மற்ற முக்கிய சாலைகளின் சந்திப்புகளிலும் கடைகளை அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதனால் வியாபாரிகள் சமரசமடைந்தனர்.

கரோனா ஊரடங்கு முடியும் வரை பேருந்துநிலையத்தில் காலை 7 முதல் பகல் 12 மணி வரை காய்கறி கடைகள் இயங்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in