Published : 11 May 2021 05:08 PM
Last Updated : 11 May 2021 05:08 PM

ராமேசுவரம் புதுமடம் கடற்கரையில் ஒதுங்கிய 1 டன் எடை கொண்ட கடல் பசு

புதுமடம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் பசு

ராமேசுவரம்

ராமேசுவரம் அருகே புதுமடம் கடற்பகுதியில் செவ்வாய்கிழமை சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட பெண் கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது.

இந்தக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, டால்பின் போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனத்தைச் சார்ந்த ஆவுளியா என்று அழைக்கப்படும் கடல் பசு இப்பகுதியில் காணப்படுகின்றன.

ராமேசுவரம் அருகே புதுமடம் கடற்கரைப் பகுதியில் செவ்வாய்கிழமை காலை கடல்பசு ஒன்று உயிரிழந்து கிடப்பதை பார்த்த அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மண்டபம் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடல் பசுவை பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் புதைத்தனர்.

கரை ஒதுங்கிய பெண் கடல் பசு 3 மீட்டர் நீளமும், 1 மீட்டர் சுற்றளவும் சுமார் 1000 கிலோ எடையும் கொண்டது. மேலும் கடல்பசு உடலில் எவ்வித காயமும் தென்படவில்லை. இது இயற்கையாக மரணித்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x