

கரோனா 2-வது அலை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அநாவசியமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனப் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மங்கனூரில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கரோனா 2-வது அலையினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தடுப்பதற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு இன்று முதல் 2 வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, கந்தர்வக்கோட்டை அருகே மங்கனூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தண்டோரா மூலம் கரோனா கட்டுப்பாடு குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது, ''கரோனா 2-வது அலையானது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் அநாவசியமாக யாரும் வெளியே வரவேண்டாம். அரசு அறிவித்துள்ள கடைகளையும் உரிய நேரத்துக்குள் மூடிவிட வேண்டும். அவசியத் தேவை இருப்பின் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்ற வாசகங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.