

மே 11 முதல் தமிழகத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் கிடைக்கும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகம் முழுவதும் நாளை (மே 10) ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், தொழில்துறையினர் மற்றும் வணிகர்களுடன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தி உள்ள ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்.
தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை அரசு எடுத்துவருகிறது. தூத்துக்குடி, ஸ்டெர்லைட் மூலம் தமிழகத்திற்கு 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும். மே 11 முதல் தமிழகத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் கிடைக்கும்.
தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்துறையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களிடம் ஆக்சிஜன உற்பத்திக்காகவும் அதை பெறுவதற்காகவும் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்" என்றார்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் மே 24 வரை ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த காலகட்டத்தில் மக்கள் பொதுமுடக்க விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு கரோனா பரவல் சங்கிலியை உடைக்க உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.