

கொடைக்கானலில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக, தனியார் பேக்கரி ஒன்று, சுய சேவையாக பொதுமக்களே ரொட்டி பாக்கெட்களை எடுத்துக்கொண்டு, உரிய பணத்தை அங்குள்ள டப்பாவில் போட்டுச்செல்லும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா ஊரடங்கு காரணமாக பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன.
இந்நிலையில் கொடைக்கானல் ஏழுரோடு அருகேயுள்ள பேக்கரி ஒன்றில் ரொட்டி பாக்கெட்கள் எப்போதும் கிடைக்கும் வகையில் தினமும் 300 க்கும் மேற்பட்ட ரொட்டி பாக்கெட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடைகள் முழுநேரம் இயங்குவதில்லை. இதையடுத்து மாலையில் அடைக்கப்படும் பேக்கரி முன்பு, நூற்றுக்கும் மேற்பட்ட ரொட்டி பாக்கெட்டுகளை வைத்துவிட்டு பணம் பாடும் டப்பா ஒன்றையும் வைத்துச்செல்கின்றனர்.
பேக்கரி ஊழியர்கள் யாரும் இல்லாமல் ‘சுயசேவை’ என்ற அறிவிப்புடன் பேக்கரி தொடர்ந்து இயங்குகிறது.
ரொட்டி பாக்கெட்தேவைப்படுபவர்கள் தாங்களே தேவையான ரொட்டி பாக்கெட்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய தொகையை அங்குள்ள டப்பாவில் போட்டுவிட்டு செல்கின்றனர். தினமும் இந்த பேக்கரிக்கு வரும் மக்கள் தாங்கள் எடுத்த ரொட்டி பாக்கெட்களுக்கான பணத்தை முறையாக டப்பாவில் போட்டுச் செல்கின்றனர். இதுபோல் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரொட்டி பாக்கெட்கள் விற்பனையாகிறது.
இது குறித்து பேக்கரி நிர்வாகத்தினர் கூறுகையில், கரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்த சுயசேவை வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. இரவில் பணத்தை கணக்கிடும்போது எடுத்து செல்லப்பட்ட ரொட்டி பாக்கெட்களுக்கான பணம் சரியாக இருக்கிறது.
இது பொதுமக்களின் நேர்மையை காட்டுகிறது. பொதுமக்கள் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர், பேக்கரி கடையின் இந்தச் செயலுக்கு பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.