

அரியலூர் மாவட்டத்தில் 44 நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கிளை பணிமனைகளின் கீழ், 150 பேருந்துகள் உள் மாவட்டம் மட்டுமன்றி, வெளிமாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்துகளில் 44 பேருந்துகள் நகரப்பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நகரப் பேருந்துகளில் ஒட்டுவில்லைகளும் ஒட்டப்பட்டுள்ளன.
அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து முட்டுவாஞ்சேரி, செந்துறை, திட்டக்குடி, ஏலாக்குறிச்சி உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் 22 நகரப்பேருந்துகளிலும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து காட்டுமன்னார்கோவில், காடுவெட்டி, முட்டுவாஞ்சேரி, செந்துறை உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் 22 நகரப்பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நகரப்பேருந்துகளாக இயக்கப்படும் பேருந்துகளை கண்டறியும் வகையில், பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன.