

புதுச்சேரியில் உள்ள தனியார் பரிசோதனை நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகளில் ஆர்டிபிசிஆர் முறையில் கரோனா பரிசோதனை செய்ய ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாகப் புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘புதுச்சேரியில் உள்ள அனைத்துத் தனியார் பரிசோதனை நிலையங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி பரிசோதனை நிலையங்களில் (ஆர்டிபிசிஆர் முறையில்) கரோனா பரிசோதனைக்குக் கட்டணமாக ஒரு பரிசோதனைக்கு ரூ.500 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த கட்டணமான ரூ.500க்கு மேல் வசூல் செய்யப்பட்டதாகப் புகார் வந்தால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனை முற்றிலும் இலவசமாகப் பொதுமக்களுக்கு எடுக்கப்படுகிறது என்றும் ஆளுநர் கூறியுள்ளார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.