

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அந்த ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி திருச்சியில் மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார். மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சின்னத்துரை, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்டச் செயலாளர் ஜீவா ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “கரோனா பரவலுக்கு மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமே காரணம். கடந்தாண்டு கரோனா பரவலால் கிடைத்த அனுபவத்தைப் பயன்படுத்தி போதிய மருத்துவக் கட்டமைப்புகளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை.
இதை மறைத்து ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பீதியைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சி செய்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
மேலும், அந்த ஆலையை நிரந்தரமாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், தமிழ்நாடு அரசுக்குத் தெரியாமல் அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜனை மத்திய அரசு அனுப்ப உத்தரவிட்டது கண்டிக்கதக்கது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மற்றொரு வழக்கின் தீர்ப்பின் மூலம் ஆலையைத் திறப்பது சட்ட விரோதம்" என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமணா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் லாரன்ஸ், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி செயலாளர் தமிழாதன், மக்கள் உரிமை மீட்பு இயக்க நிர்வாகி பசீர் அகமது, மக்கள் உரிமை கூட்டணி நிர்வாகிகள் காசிம், ஜோசப், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கோபி, மணலிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.