மன்னார்குடியில் கள்ள நோட்டு புழக்கம்; ரூ1.90 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் பறிமுதல்- இளைஞர் கைது
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ரூ.2,000 கள்ள நோட்டுகளை வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி பகுதியில் டிஎஸ்பி இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நேற்று இரவு மன்னார்குடி நகரம் முழுவதும் வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக அசேஷம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு இளைஞர் தங்கியிருந்தார்.
அவரது அறையைச் சோதனை மேற்கொண்ட போலீசார் ரூ1.90 லட்சம் மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள், 95 மற்றும் 50 கிராம் கஞ்சா பொட்டலம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அந்த இளைஞரைக் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர் திருமக்கோட்டை, மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் (33) என்பது தெரியவந்தது மேலும் தமிழகத்தின் பல நகரங்களில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுகின்ற கும்பலுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதும், இந்த இளைஞர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் கள்ளநோட்டு மாற்றிய வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
