Published : 25 Apr 2021 06:24 PM
Last Updated : 25 Apr 2021 06:24 PM

சாலையோரம் உணவின்றி தவித்த முதியவர்; பசி போக்கிய காவல் உதவி ஆய்வாளர்: குவியும் பாராட்டு

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஊரடங்கின்போது உணவின்றி தவித்த சாலையோர ஆதரவற்ற முதியவருக்கு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உணவு வழங்கி, அருகிலேயே இருந்து பரிமாறி உண்ண வைத்த செயல் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

கரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும் இரவு 10 மணிக்கும் மேல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த காலகட்டத்தில் இரவில் கடைகள் இயங்கவும், வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது,

இருந்தபோதும் யாரும் வெளியில் நடமாடுகிறார்களா என கண்காணிக்க போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன்படி திண்டுக்கல்லில் நேற்று இரவு திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் நகர் தெற்கு காவல் ஆய்வாளர் ஜான்சன் அப்பகுதியில் பசியால் வாடியநிலையில் ஆதரவற்ற முதியவர் ஒருவரை கண்டார்.

இரவு 10 மணியை நெருங்கியதால் அப்பகுதியில் கடைகளை அடைத்துக்கொண்டிருந்தனர். முதியவரின் நிலையைக் கண்ட காவல் உதவி ஆய்வாளர் உடனே கடைகளை அடைக்கும் முன்பு உணவு வாங்கிவந்து முதியவருக்கு வழங்கினார். அருகில் இருந்து பொட்டலத்தை பிரித்துக்கொடுத்து சாப்பிடவைத்தார்.

இது அந்த வழியே சென்ற மக்களின் கவனத்தை ஈர்த்தது. காவலரின் மனிதநேயத்தை அனைவரும் பாராட்டிச்சென்றனர்.

அதேபோல், இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டமும் இல்லை. இருந்தபோதும் சாலையோரவாசிகளைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு உணவு வழங்க பல தன்னார்வலர்கள் முன்வந்தனர்.

காலையில் உணவு தயாரித்து அவர்கள் இருக்கும் இடம் தேடிச்சென்று வழங்கினர். பசியில்லாத பாரதம் அமைப்பு சார்பில் திண்டுக்கல் நாகல்நகர் உள்ளிட்ட சாலையோரம், பாலங்களுக்கு அடியில் ஆதரவின்றி தங்கியுள்ள நபர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் வழங்கினர். இந்த சேவையை முழு ஊரடங்கு அமல்படுத்தும் நாட்களில் தொடர்ந்து செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x