

கரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்தும், மழை அறிவிக்கப்பட்டதாலும், சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருவதாலும், இதைக் கருத்தில் கொண்டு சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குப் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் கோயில்களில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கரோனா தொற்றின் காரணமாக கோயில்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.