

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இறந்த நிலையில் இரண்டு சிசுக்கள் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அவற்றைக் குழிதோண்டிப் புதைத்தனர். தகவலறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சிசுக்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்யத் தயாராகி வருகின்றனர்.
செந்துறை அடுத்துள்ள ஆதனக்குறிச்சி கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு சிசுக்கள் தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் நேற்று மாலை கிடந்தன. அப்பகுதியில் கால்நடைகளை மேய்க்கச் சென்ற சிலர், அதனைப் பார்த்துள்ளனர். வெளியிலேயே கிடந்தால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசும், மேலும் நாய்கள் இழுத்துச் செல்லும் என நினைத்து அப்பகுதியில் குழி தோண்டி இரண்டு சிசுக்களையும் நேற்று புதைத்துள்ளனர்.
இந்தத் தகவல் ஆதனக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராயருக்கு இன்று காலை (ஏப்.23) தெரியவந்துள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர் குமரய்யாவுக்கு விஏஓ ராயர் தகவல் கொடுத்ததுடன், தளவாய் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
இந்நிலையில், சிசுக்கள் புதைக்கப்பட்ட இடத்தில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் முன்னிலையில், சிசுக்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இன்னும் சிறிது நேரத்தில் பிரேதப் பரிசோதனை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.
மேலும், இந்த இரண்டு சிசுக்களும் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் போல உள்ளன. இந்த சிசுக்கள் யாருக்கு, எங்கு பிறந்தன? இங்கு எப்படி வந்தன? யார் வீசிச் சென்றது? எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.