

வத்தலகுண்டு அருகே கரோனா கட்டுப்பாடு காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த கிராமிய இசைக் கலைஞர்கள், கருப்பண்ணசுவாமி கோயில் முன்பு மூன்று மணி நேரம் தொடர்ந்து இசை வாசித்து சாமியிடம் முறையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாதஸ்வரம், தவில் மற்றும் நையாண்டி மேளம் உள்ளிட்ட கிராமிய இசைக் கலைஞர்கள் உள்ளனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருவிழா நடத்த தடையால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக மிகவும் சிரமப்பட்ட நிலையில், கடந்த மூன்று மாதங்களாக படிப்படியாக இயல்புநிலை திரும்பியநிலையில், தற்போது மீண்டும் கரோனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வாழ்வாதாரத்தை இழந்துவருவதாக கூறுகின்றனர்.
தமிழக அரசு இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குடும்பத்திற்கு ரூ.ஐந்தாயிரம் நிதி வழங்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தும்விதமாக நேற்று வத்தலகுண்டு அருகே முத்துலாபுரத்தில் உள்ள கருப்பணசுவாமி கோயிலில் மூன்று மணிநேரம் தொடர்ந்து இசைவாசித்து தங்கள் வாழ்வாதாரம் மீள சாமியிடம் முறையிட்டனர்.