

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று காலை அவர் பதிவிட்ட ட்வீட்டில், "டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழுவினரிடம் விசாரித்தேன். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். மேலும், அவருக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணம்பெற வேண்டுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மன்மோகன் சிங் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தியா கரோனா இரண்டாவது அலையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது.
கடந்த மூன்று நாட்களகா தொடர்ந்து தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 2.5 லட்சத்தைத் தாண்டியும், இறப்பு எண்ணிக்கை 1000க்கும் மேலாகவும் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.