

புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா பொருட்களை நேற்று இரவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை தெட்சிணா மூர்த்தி மார்க்கெட் அருகே அப்துல் சலாம் என்பவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குற்றத் தடுப்பு நுண்ணறிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், அப்துல் சலாமின் வீட்டுக்குள் நேற்று இரவு நுழைந்து சோதனையிட்டதில் அவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் அளவிலான 20 மூட்டை குட்கா பொருட்களைச் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எனினும் தகவல் அறிந்த அப்துல் சலாம் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.