

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.
அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த 58 வயது ஆண் ஒருவருக்குக் கடந்த சில நாட்களாக சளி மற்றும் இருமல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் கடந்த 9-ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தின் பொது அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார், இ-சேவை மையங்கள் மற்றும் தேர்தல் பிரிவு மட்டும் செயல்படுகிறது.
இதையடுத்து அங்கு பணியில் உள்ள 40 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், அவருடன் பணியாற்றிய 10 பேருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து 14-ம் தேதி வரை அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.