

முதுகுளத்தூர் அருகே வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கண்டிலான் கிராமத்தில் 626 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கண்டிலான் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் மக்கள் வாக்களிக்க வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து இன்று வாக்களிப்பதற்காகச் சென்ற வாக்காளர்களான தாமோதரன் (60), புவனேஸ்வரி (24), முனியசாமி (40), பூமி கிருஷ்ணன் (40), முருகன் (41) ஆகிய 5 பேர் மீது சமுதாயக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் முதுகுளத்தூர் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்ப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வாக்குப்பதிவு சமுதாயக் கூடத்தில் நடைபெற்று வருகின்றது.