

கரூர் மாவட்டம் குளித்தலையில் முள்காட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் வாக்காளர் தகவல் சீட்டுகள் (பூத் ஸ்லிப்) வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (ஏப்.6-ம் தேதி) நடைபெறுகிறது. வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி பாகம் அமைவிடம், பாகம் எண், வாக்காளர் வரிசை எண் ஆகியவை அடங்கிய வாக்காளர் தகவல் சீட்டு, தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை நகராட்சி 14-வது பெரியார் நகர் பகுதிக்கான வாக்காளர் தகவல் சீட்டுகள் (பூத் ஸ்லிப்) அப்பகுதியில் இருக்கும் முள்காட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் கத்தையாக வீசப்பட்டுக் கிடந்தன. அவற்றைப் பெரியார் நகர் மக்கள் இன்று (ஏப்.5ம் தேதி) காலை கண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரம்பகட்டத் தகவலின்படி அப்பகுதி வாக்குச்சாவடி அலுவலர், தனது பகுதி வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய வாக்காளர் தகவல் சீட்டுகளை வழங்காமல் கத்தையாகக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.