ஹாட் லீக்ஸ்: நத்தம் திரும்பியதும் நல்லதா தெரியல!
திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கும் மறைமுக ஒப்பந்தம் உண்டு என்ற தகவல் போயஸ் கார்டன் வரைக்கும் போனதால், கடந்த தேர்தலில் ஆத்தூரில் பெரியசாமியை எதிர்த்தே விசுவநாதனை நிறுத்தி பலிகடாவாக்கினார் ஜெயலலிதா.
இம்முறை தனது சொந்தத் தொகுதியான நத்தத்துக்கே நகர்ந்துவிட்டார் விசு. ஆனால், அங்கே அவரது மைத்துனர் கண்ணனின் தாம் தூம் நடவடிக்கைகளால் விசுவநாதனுக்கு பழைய செல்வாக்கு இல்லாமல் போய்விட்டதாம். தொகுதியில் முத்தரையர்கள் வாக்கு மட்டுமே 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது. இதைக் கணக்கில் வைத்து, முத்தரையரான ஆண்டி அம்பலத்தையே மீண்டும் இங்கே நிறுத்தி இருக்கிறது திமுக.
“நம்ம ஆட்சி வரப்போகுது... நம்ம சாதி சனத்துக்கு ஏதாச்சும் செய்யணும்னு நினைக்கிறேன். அதனால என்னைய கைவிட்டுடாதீங்க” என்று ஊர் ஊருக்கு சாதி கூட்டம் போட்டு சத்தியம் வாங்கியிருக்கிறாராம் அம்பலம். இதனால் விசுவநாதன் கூடாரம் வெலவெலத்துக் கிடக்கிறது.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.
