

கள்ளக்குறிச்சி காங்கிரஸ் வேட்பாளர் கே.ஐ.மணிரத்னம் விபத்தில் காயமடைந்ததை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி பகுதிக்கு பிரச்சாரத்திற்காகக் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தியாகதுருகம் அருகே சின்ன மாம்பட்டு கிராமப் பகுதியில் எதிர்பாராத விதமாக முதியவர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலை சாலையைக் கடக்க முயன்றார்.
அதனால் அவர் மீது கார் மோதாமல் இருக்க ஓட்டுநர் காரைத் திருப்பியபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணிரத்னம், அவரது மகன் அரவிந்தன், அவரது உதவியாளர் திருநாவுக்கரசு, ஓட்டுநர் கவுதமன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து நால்வரும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடைசி நேரப் பிரச்சாரத்தில் வாக்குச் சேகரிக்கச் சென்ற மணிரத்னம் விபத்துக்குள்ளானது காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.