

2011 தேர்தலில், சோழவந்தான் (தனி) தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார் திமுக முன்னாள் அமைச்சர் தமிழரசி. ஆனால், இவர் வெற்றிபெற்றால் அமைச்சர் பங்கிற்கு வருவார். அதனால் தனக்கு அமைச்சர் வாய்ப்பு தட்டிப் போய்விடும் என்று கணக்குப் போட்ட மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி, தமிழரசியை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதிக்கு தள்ளிவிட்டார்.
அங்கேயும் அதே கதை தான். தமிழரசி அமைச்சரானால், தனக்கான வாய்ப்பில் தடை விழலாம் என பதறினார் மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன். விளைவு... திமுகவினரே தமிழரசியைத் தோற்கடித்தார்கள். அடுத்த தேர்தலிலும் மானாமதுரை தனக்குக் கிடைக்கும் என நினைத்தார் தமிழரசி. ஆனால், அறிமுகம் இல்லாத முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜின் மகளைக் கொண்டுவந்து மானாமதுரையில் நிறுத்தினார்கள்.
விளைவு... மீண்டும் மானாமதுரையை அதிமுகவே தக்கவைத்துக் கொண்டது. இம்முறை, கனிமொழியின் கருணையால் மீண்டும் மானாமதுரையில் நிற்கிறார் தமிழரசி. முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ராஜ கண்ணப்பன் வென்றால், நிச்சயம் அமைச்சராவார் என்கிறார்கள். அதேபோல் தமிழரசியும் வென்றால் அமைச்சர் பதவி உறுதி என்று பேசப்படுகிறது.
யாதவர் கோட்டாவில் ராஜ கண்ணப்பனுக்கும், மாவட்ட கோட்டாவில் தமிழரசிக்கும் அமைச்சர் பதவி உறுதியானால், பெரியகருப்பனுக்கு இம்முறை அமைச்சர் பதவி கிடைப்பது சிரமம் என்கிறார்கள். இந்தப் பேச்சு, யாரைப் பதம்பார்க்கப் போகிறதோ தெரியவில்லை!
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.