

வேதாரண்யம் தொகுதியில், தனக்கென தனித்த செல்வாக்கை வைத்திருப்பதால் தான் பாஜகவுக்கு சென்று திரும்பிய பிறகும் முன்னாள் எம்எல்ஏ-வான வேதரத்தினத்துக்கு மீண்டும் சீட் கொடுத்தது திமுக. ஆனால், இப்போது திமுகவுக்குள் நடக்கும் உள்குத்துகளைப் பார்த்தால் வேதரத்தினத்தின் வெற்றிக்கே வேட்டுவைத்துவிடுவார்கள் போலிருக்கிறது.
பாஜகவுக்கு போய்விட்டு திரும்பிய வேதரத்தினத்துக்கு மீண்டும் சீட் கொடுத்தது திமுகவின் சீனியர் தலைகளுக்கே பிடிக்கவில்லை. அவர்களை எல்லாம் சாதுர்யமாக பேசி தனக்குச் சாதகமாக சைலன்டாக்கி விட்டார், இங்கு களத்தில் நிற்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். கடந்தமுறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் பி.வி.ராஜேந்திரன் இங்கு போட்டியிட்டார். அப்போது திமுகவினர் சிலரே ஓ.எஸ்.மணியனுக்கு ஆதரவாக நின்று பிவிஆரை பின்னுக்குத் தள்ளினார்கள்.
கடந்த முறை, பிவிஆரை தோற்கடிக்க திமுகவினரை வளைத்த மணியன் தரப்பு, இம்முறை, திமுகவை வீழ்த்த காங்கிரஸ் முக்கிய தலைகளை சாதிய பாசத்துடன் பேசி வேதரத்தினத்துக்கு வேலைசெய்யவிடாமல் முடக்கிப் போட்டுவிட்டதாம். ஆனாலும், “அனைத்தையும் தாண்டி வேதரத்தினம் தனது சொந்த செல்வாக்கால் நிச்சயம் வெற்றி பெறுவார்” என்கிறார்கள் அவருக்காக களத்தில் நிற்கும் உடன்பிறப்புகள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.