

புதுச்சேரியில் மதுபானக் கடைகள் நாளை முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன. இதையடுத்து முறைகேட்டைத் தவிர்க்கவும், கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் பத்து கலால் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் மது வாங்க ஏராளமானோர் இன்று கடைகளில் குவிந்தனர்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி புதுவை மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகள், பார்கள் அனைத்தும் நாளை (4-ம் தேதி) முதல் 6-ம் தேதி வரை 3 நாட்கள் மூடப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி மே 2-ம் தேதி முதல் 3-ம் தேதி மாலை 4 மணி வரையும் மதுபானக் கடைகள் மூடப்படுகின்றன. இதற்கான உத்தரவைக் கலால் துறை பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து மதுபானக் கடைகளில் இன்று பலரும் மதுபானங்களை வரிசையில் நின்று வாங்கினர்.
குடோன்களுக்கு சீல்
முறைகேட்டைத் தவிர்க்க குடோன்களுக்கு சீல் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கலால்துறை துணை ஆணையர் சுதாகர் கூறுகையில், "மதுபானங்களை விதி மீறி விற்பதைத் தடுக்க குடோன்கள் இன்று மாலை முதல் சீல் வைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடைகள் இரவு முதல் சீல் வைக்கப்படும். இதற்கென கலால் அதிகாரிகள் அடங்கிய பத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.