

விருத்தாச்சலத்தில் கடை வீதியில் நடந்து சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (ஏப். 02) அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, கடலூர் மாவட்டம் வடலூரில், கடலூர் மாவட்ட திமுக வேட்பாளர் கோ.ஐயப்பன் (கடலூர்), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி), துரை.கி.சரவணன் (புவனகிரி), திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோவில்), முகம்மது யூசூப் (சிதம்பரம்) ஆகியோரை ஆதரித்து, வடலூர் வள்ளலார் பேருந்து நிலையத்தில் வாக்குச் சேகரிப்பதற்காக விருத்தாச்சலம் வழியாகச் சென்றார்.
அப்போது, திடீரென வாகனத்தை நிறுத்திய ஸ்டாலின், விருத்தாச்சலம் கடை வீதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணனுடன் நடந்து சென்று கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். சுமார் 200 மீட்டர் தூரம் நடந்து சென்றவர் பின்னர், வேனில் ஏறி வடலூர் நோக்கிப் புறப்பட்டார். அவருக்கு அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கைகொடுத்தும், வணக்கம் தெரிவித்தும் உற்சாகம் அடைந்தனர்.