எனது தாயாரின் பெயரை தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தாதீர்கள்: உதயநிதிக்கு சுஷ்மா ஸ்வராஜின் மகள் கண்டிப்பு

எனது தாயாரின் பெயரை தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தாதீர்கள்: உதயநிதிக்கு சுஷ்மா ஸ்வராஜின் மகள் கண்டிப்பு
Updated on
1 min read

தனது தாயாரின் பெயரை தேர்தல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த வேண்டாம் என திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக பன்சூரி ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "உதயநிதி ஸ்டாலின் அவர்களே, உங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக எனது தாயாரின் பெயரைப் பயன்படுத்தாதீர்கள். உங்களின் பேச்சு தவறானவை. பிரதமர் நரேந்திர மோடி எனது தாயாரின் மீது மிகுந்த மரியாதையையும் கவுரவத்தையும் வைத்திருந்தார். எங்களின் இருண்ட காலத்தில் பிரதமரும், கட்சியும் எங்களுக்குப் பக்கபலமாக இருந்தது. உங்களுடைய பேச்சு எங்களுக்கு வேதனை அளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை டேக் செய்து அவர் இந்த ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார்.

முன்னதாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கடந்த புதன்கிழமையன்று பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர்களை ஓரங்கட்டியதாகவும், சுஷ்மா ஸ்வராஜ் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தத்தைத் தாங்க இயலாமலேயே மறைந்தார் எனப் பேசியிருந்தார்.

உதயநிதியின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சுஷ்மாவின் மகள் ட்விட்டரில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in