

பாஜகவின் பினாமியாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளார் என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
காட்டுமன்னார் கோவிலில் விசிக வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “அதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் தோள்களில் ஏறிக் கொண்டு பாஜக தமிழகத்தில் நுழையப் பார்க்கிறது. பாஜகவின் பினாமியாக பாமக தலைவர் ராமதாஸ் உள்ளார். ராமதாஸ் நீர்த்துப் போய்விட்டார். சமூக நீதியின் காவலராக வேல்முருகன் உருவாகிறார். அவருக்குத்தான் இனி எதிர்காலம்” என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பண்ருட்டியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன்படி, காட்டுமன்னார் கோயில் (தனி) சிந்தனைச் செல்வன், செய்யூர் (தனி)-பனையூர் பாபு, வானூர் (தனி)- வன்னி அரசு, திருப்போரூர்-எஸ்.எஸ்.பாலாஜி, அரக்கோணம் (தனி)-கெளதம சன்னா, நாகப்பட்டினம்-ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.