

உதகையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களுக்கு, பாஜக சின்னம் பொருந்திய அடையாள அட்டையை போலீஸார் வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ள்து.
நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக வேட்பாளர் மு.போஜராஜனுக்கு ஆதரவாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், பிரச்சாரத்துக்குச் செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களுக்குக் காவல்துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும் என நேற்று இரவு போலீஸார் தெரிவித்தனர். இதற்காகச் செய்தியாளர்கள் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டு, காலையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மேலும், காவல்துறை வழங்கிய அடையாள அட்டையைக் கட்டாயம் செய்தியாளர்கள் அணிய வேண்டும் என போலீஸார் வற்புறுத்தினர். அடையாள அட்டையில், பிரதமர் மோடியின் படத்துடன், பாஜக கட்சியின் தாமரை சின்னமும் அச்சிடப்பட்டிருந்தது. மேலும் செய்தியாளர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு, நகர டிஎஸ்பி மகேஸ்வரன் கையேழுத்துடன் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
பாஜக சின்னம் அச்சிடப்பட்டிருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி, பாஜக சின்னம் பொருந்திய அடையாள அட்டையை போலீஸார் வழங்கியது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளிக்க உள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.