தமிழகத்தில் தாமரை என்றும் மலராது: பாஜகவுக்கு கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி பதிலடி

தமிழகத்தில் தாமரை என்றும் மலராது: பாஜகவுக்கு கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி பதிலடி
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவியும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகளான ஸ்ரீநிதி சிதம்பரம் நாட்டியம் ஆடும் படத்தைப் பயன்படுத்தி தாமரை மலரட்டும் என்று குறிப்பிட்டு பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜகவின் செயல் முற்றிலும் அபத்தமானது என சாடியுள்ள ஸ்ரீநிதி, தமிகத்தில் தாமரை என்றுமே மலராது என தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

செம்மொழி மாநாடு நடந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி எழுத்தில் உருவான செம்மொழியாம் தமிழ்மொழி பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

அந்தப் பாடலில் ஒரு காட்சியில் கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் நடனமாடியிருப்பார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தக் காட்சி அடங்கிய வீடியோ பதிவுடன் தமிழக பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அதில் ‘தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்; வாக்களிப்பீர் தாமரைக்கே’ என்று பதிவிட்டிருந்தது.

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக ஸ்ரீநிதி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனது புகைப்படத்தை பாஜக தனது பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தியது அபத்தமான செயல். தமிழகத்தில் தாமரை என்றும் மலராது' என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பைப் பதிவு செய்த நிலையில், பாஜக சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோவை நீக்கியது. இருப்பினும் அந்த வீடியோ ஸ்க்ரீன்ஷாட் இணையத்தில் பரவி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in