

தேர்தல் ஆணையத்திடமே சொத்து விவரம் குறித்து பொய்சொல்லும் அதிமுக, திமுகவினர் மக்களிடம் எப்படி பொய் சொல்லாமல் இருப்பார்கள், என இந்திய ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவர் பாரிவேந்தர் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சரண்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இன்று நத்தம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
திமுகவும், அதிமுகவும் ஒருவரை ஒருவர் மாறிமாறி ஊழல் புகார் கூறுகின்றனர். சொத்து மதிப்பு குறிப்பிடுகையில் ஸ்டாலினுக்கு கார் இல்லை என்கிறார்.
முதலமைச்சர் சொத்து விபரம் குறித்து பொய் சொல்கிறார். ஆனால் கமலஹாசன் உண்மையாக ரூ.170 கோடி சொத்து இருக்கிறது என்று சொல்லியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திடமே சொத்து விவரம் குறித்து பொய் சொல்பவர்கள், மக்களிடம் எப்படி பொய் சொல்லாமல் இருப்பார்கள்.
எனவே மக்கள் மீது அக்கறையுள்ள மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய நல்ல கட்சிகளுக்கு உங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்யுங்கள், என்றார்.