Last Updated : 30 Mar, 2021 08:30 AM

 

Published : 30 Mar 2021 08:30 AM
Last Updated : 30 Mar 2021 08:30 AM

தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகளை பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மொத்தமாக வைக்கப்பட்டிருந்தன. பெங்களூருவில் இருந்து பெல் நிறுவன பொறியாளர்கள் வந்து ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் முழுமையாக பரிசோதனை செய்து தயார்படுத்தினார்.

இதனை தொடர்ந்து 6 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதிக்கான இயந்திரங்கள் மட்டும் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகளை பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.

6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இந்த பணியை மண்டல தேர்தல் குழுவினர் மேற்கொண்டனர். மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 2097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு கட்டுப்பாட்டு அலகு என மொத்தம் 2,097 கட்டுப்பாட்டு அலகுகள் தேவை. மேலும் 20 சதவீதம் ரிசர்வ் என மொத்தம் 2,518 கட்டுப்பாட்டு அலகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதுபோல மாவட்டத்தில் விளாத்திகுளம் மற்றும் திருச்செந்தூர் 2 தொகுதிகளில் மட்டுமே 15 வேட்பாளர்கள் இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குச்சீட்டு அலகு போதுமானதாகும். தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 4 தொகுதிகளிலும் 15 வேட்பாளர்களுக்கு மேல் உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குச்சீட்டு அலகுகள் வைக்க வேண்டியுள்ளது. எனவே 6 தொகுதிகளிலும் 20 சதவீத ரிசர்வையும் சேர்த்து மொத்தம் 4,254 வாக்குச்சீட்டு அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வாக்குச்சீட்டு அலகுகளில் தான் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகள் ஒட்டும் பணி நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகளை ஒட்டும் பணி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நேற்று நடைபெற்றது.

இதேபோல் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வாக்குச்சீட்டு ஒப்புகை இயந்திரங்களில் (விவிபாட்) வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவற்றை பதிவு செய்யும் பணியும் நேற்று நடைபெற்றது. 6 தொகுதிகளிலும் 20 சதவீத ரிசர்வ் என மொத்தம் 2600 விவிபேட் இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவு செய்யப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றன.

இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ்குமார், தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகளை பொருத்தும் பணியும், விவிபாட் கருவியில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவு செய்யும் பணியும் நேற்று நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x