

‘‘ஸ்டாலின் பெண்மையை மதிப்பவராக இருந்தால் ஆ.ராசாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்,’’ என காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜகவின் துணை தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுகவின் ஆ.ராசா முதல்வரை மட்டும் காயப்படுத்தவில்லை. பெண்ணினத்தையே காயப்படுத்தியுள்ளார். யாரை வேண்டுமென்றாலும் இழிவுப்படுத்தலாம் என்பது அவரது வழக்கம். அரசியல், கருத்தியல் ரீதியாக பிரச்சினைகளை எதிர்கொள்ள நாங்கள் தயராக இருக்கிறோம்.
அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பதற்கு எந்த விஷயமும் திமுகவிடம் இல்லை. அதனால் தனிநபர் மீதான தாக்குதலில் இறங்கியுள்ளனர். இது வண்மையாகக் கண்டிக்கதக்கது . சித்தாந்த ரீதியாக திக , திமுகவை கடுமையாக விமர்சிப்பவன் நான். தனிநபர் பற்றி விமர்சிப்பது இல்லை.
அவரது விளக்கங்கள், மன்னிப்பு ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்மையை ஸ்டாலின் மதிப்பவராக இருந்தால் ஆ.ராசாவை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் திமுகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.