ஹாட் லீக்ஸ்: விராலிமலை... விசும்பும் வேட்பாளர்கள்!
விராலிமலையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கும் திமுக வேட்பாளர் பழனியப்பனுக்கும் போட்டி மிகக் கடுமையாக மாறியிருக்கிறது. அதனால் இருவரும் வாக்காளர்களிடம் மிகவும் உருக்கமாக பேசி வாக்கு கேட்டு வருகிறார்கள்.
“போன தடவ நின்னேன் தோக்கடிச்சுட்டீங்க. இந்த தடவ, மீதியிருந்த சொத்துப் பத்து எல்லாத்தையும் வித்துட்டு நிக்கிறேன். நீங்க என்னைய ஜெயிக்க வெச்சா உசுரோட இருப்பேன்... இல்லாட்டா சாகுறதத் தவிர எனக்கு வேற வழியில்ல” என்கிறார் பழனியப்பன். விஜயபாஸ்கரோ, “எனக்கு சுகர் இருக்கு, பீபி இருக்கு” என்று மக்களிடம் அனுதாபம் தேடுகிறார்.
இந்நிலையில், விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒரு போஸ்டரும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ‘வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டுக் கேட்பவர்களே தோல்வியடைந்தால் உயிரை விட்டுவிடுவேன் என்று கூறும்பொழுது, 10 ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு பகல் பாராமல் ஒவ்வொரு கஷ்டகாலங்களிலும் உடன் நின்ற என்னுடைய முடிவு எப்படி இருக்கும்? - முடிவு உங்கள் கையில்’ - அந்தப் போஸ்டரில் இருக்கும் வாசகங்கள் இப்படி மிரட்டுகிறது.
சிபிஐ-க்கே டேக்கா கொடுத்த விஜயபாஸ்கருக்கு, பழனியப்பனுக்கு பஞ்சாமிர்தம் கொடுப்பதா பெரிய வேலை?
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.
