

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவினர் வென்றால் தமிழகத்தை விற்றுவிடுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டையில் திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியத்தை ஆதரித்து திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “அதிமுகவுக்கு விழும் வாக்குகள் பாஜகவுக்குத்தான் செல்லும். அதிமுக வேறு, பாஜக வேறு இல்லை. தற்போது தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழக உரிமைகளை மோடியிடம் அடகு வைத்துவிட்டார். எனவே, தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட அதிமுக கூட்டணி வெல்லக் கூடாது. அதிமுகவினர் வெற்றி பெற்றால் தமிழகத்தை விற்றுவிடுவார்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் ஆதரவு அளித்ததுபோல், வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டையில் உள்ள 40க்கும் மேற்பட்ட தெருக்களில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.