

இல்லாததைச் சொன்னால் நாக்கு உங்களுக்குச் சொந்தமாக இருக்காது என்று அமைச்சரும், திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஆர்.பி.உதயகுமார் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் அனல் பறக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை, திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார்.
திருமங்கலம் தொகுதியில் கண்டுகுளம், சாத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் அவரது மகள் யு.பிரியதர்ஷினியும் தந்தைக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசும்போது, ''திமுக கட்சிக்காரர்களே, நீங்கள் சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேளுங்கள். திட்டங்களைச் சொல்லி ஓட்டு கேளுங்கள். நாங்கள் வந்தால் அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று சொல்லி வாக்குச் சேகரியுங்கள். மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள்.
அதை விட்டுவிட்டு தோல்வி பயத்தில் இல்லாததையும் பொல்லாததையும், இழுத்தும் பழித்தும் பேசினால், உங்கள் நாக்கு உங்களுக்குச் சொந்தமாக இருக்காது'' என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
முன்னதாக, ஆர்.பி.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் 30 கிலோ மீட்டர் நடைப்பயணம் சென்றார். அரசின் 10 ஆண்டு காலச் சாதனைகளை விளக்கி டி.கல்லுப்பட்டியில் தொடங்கிய நடைப்பயணம், டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயில், கள்ளிக்குடி, திருமங்கலம் வழியாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.