"தமிழக முதல்வர் போன்ற போலி விவசாயிகளை தோற்கடிக்க வேண்டும்" பஞ்சாப் விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பாண்டிகுடியில் நடைபெற்ற பகரச்சாரத்தில் பேசுகிறார் ராஜ் வீரேந்தர்சிங் கோல்டன்  உடன் வேட்பாளர் சி.வீ.மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பாண்டிகுடியில் நடைபெற்ற பகரச்சாரத்தில் பேசுகிறார் ராஜ் வீரேந்தர்சிங் கோல்டன்  உடன் வேட்பாளர் சி.வீ.மெய்யநாதன்.
Updated on
1 min read

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்த தமிழக முதல்வர் பழனிசாமி போன்ற போலி விவசாயிகளை தோற்கடிக்க வேண்டும் என பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளரும், அஜாத் கிஷான் சங்கர்ஸ் கமிட்டியின் பஞ்சாப் மாநில துணைத் தலைவருமான ராஜ்வீந்தர்சிங் கோல்டன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ. மெய்யநாதனை ஆதரித்து பாண்டிக்குடியில் நேற்று (மார்ச் 28) நடைபெற்ற பிரச்சாரத்தின்போது அவர் பேசியது:

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஒருபுறமிருக்க, கடும் குளிரிலும், பனியிலும் நாங்கள் பட்ட கஷ்டம் இனிமேல் இந்த நாட்டில் வேறு யாரும் படக்கூடாது என்பதற்காக வேளாண் சட்டத்தைக் கொண்டுவந்துள்ள பாஜகவை எதிர்த்து பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக சென்று தேர்தல் நடைபெறும் தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது, வழக்கு பதிவு செய்து மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் பாரதிய ஜனதாவை தமிழகத்தில் எதிர்க்கக் கூடிய பிரதான கட்சியாக திமுக இருப்பதால் அந்தக் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் டெல்லியிடம் தலைகுனிந்துதான் இருப்பார்கள். தமிழர்கள் ஒரு போதும் தலை குனிந்து விடக்கூடாது. எனவே, அதிமுகவுக்கு எதிராக வாக்களியுங்கள்.

தான் ஒரு விவசாயி என கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் பழனிசாமி, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் நிலம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் நம்மைப்போன்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆட்சியில் இருந்து சீரழிக்கும் இத்தகைய போலி விவசாயிகளை தோற்கடிக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in