

காரைக்கால் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று (மார்ச் 27) காலை 8.20 மணி அளவில், ஏதோ ஒரு பொருள் வெடித்தது போன்ற மிகப்பெரிய சத்தம் கேட்டது. ஒலி 50 கி.மீ சுற்றளவுக்கு மேல் கேட்டதால் மக்களுக்கு அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம் முழுவதும் மற்றும் தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோயில் உள்ளிட்ட சுமார் ஐம்பது கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்களும் இந்த சத்தத்தைக் கேட்டுள்ளனர். நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் இந்தச் சத்தம் உணரப்பட்டதாகக் கூறுகின்றனர்.
சில பகுதிகளில் இரண்டு முறை அந்த வெடிச் சத்தத்தைக் கேட்டதாகச் சில மக்கள் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் வீட்டினுள் அதிர்வவை உணர்ந்ததாகவும், பாத்திரங்கள் அசைந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்த சத்தத்திற்கான சரியான காரணம் தெரியாத நிலையில் வானில் ஹெலிகாப்டர் வெடித்து விட்டதாகவும், பூமிக்கடியில் ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் வெடி வைத்திருக்கலாம், சோனிக் பூம் நிகழ்வாக இருக்கலாம் என்றும் மக்கள் பலவாறு பேசிக் கொள்கின்றனர்.
இதுதொடர்பாகக் காரைக்கால் காவிரிப்படுகை ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ஓஎன்ஜிசிக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தனர்.
எனினும் உரிய துறையினர் இதற்கான சரியான காரணத்தை தெரிவிக்கும் பட்சத்தில்தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.