

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வரும் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட இருந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர்.
கருணாஸ் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டைக் கண்டித்து தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் முக்குலத்தோர் சமுதாயத்தைப் புறக்கணிப்பதாகக் கூறி நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வந்த முதல்வர் பழனிசாமிக்கு எதிராக திருப்பத்தூரில் கருப்புக் கொடி காட்டி போராட்டம் செய்ய கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படையினர் முடிவு செய்திருந்தனர்.
இதையறிந்த போலீஸார் சிவகங்கையில் அருகே பனங்காடியில் உள்ள தோட்ட வீட்டில் தங்கியிருந்த கருணாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு காவலில் வைத்தனர். மேலும் திருப்பத்தூரில் முக்குலத்தோர் புலிப்படை மாவட்டத் தலைவர் வெள்ளைச்சாமியையும் கைது செய்தனர்.
இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், ‘‘ கள்ளர், மறவர், அகமுடையோரை தேவரினம் என ஜெயலலிதா அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து 4 ஆண்டுகளாக வலியுறுத்தினேன். ஆனால் எங்களது கோரிக்கையை புறக்கணித்துவிட்டு முதல்வர், துணை முதல்வர் மற்ற சமூக மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளனர். ஜனநாயக ரீதியாக போராட முயன்ற எங்களை பழனிசாமிக்கு ஆதரவாக போலீஸார் காவலில் வைத்துள்ளனர்.
ஒருசில சமூகத்திற்காக முக்குலத்தோர் சமுதாயத்தை அரசியல் அனாதைகளாக்க முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது, என்றார்.