

உண்டியல் சேமிப்பு பணத்தை தேர்தல் நிதியாக வழங்கிய 4 வயது சிறுமியின் செயலைப் பாராட்டி திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய் பெற்றுக்கொண்டார்.
தேர்தல் களத்தில் அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற பலவித உத்திகளை கையாண்டு வருகின்றனர். கடைசி ஆயுதமாக வாக்காளர்களுக்கு பணம் தரவும் முயற்சிக்கின்றனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையமும் பலகட்ட முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அன்றாட செலவுகளுக்கே மார்க்சிஸ்ட் கட்சியினர் பொதுமக்களிடம் வசூல் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு பொதுமக்கள் பலரும் தாமாக முன்வந்து உதவி வருகின்றனர். அந்த வகையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்களும், திமுக கூட்டணி கட்சியினரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உதவி வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் அவனியாபுரத்தைச் சேர்ந்த சுப்பையாவின் பேத்தி பத்தாம் வகுப்பு மாணவி சுகன்யா தாம் சேமித்து வைத்திருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை தேர்தல் நன்கொடையாக அளித்தார்.
அதேபோல், அவனியாபுரத்தில் பெட்டிக்கடை நடத்தும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர் முருகனின் பேத்தி 4 வயது சிறுமி தன்யாஸ்ரீ, தனது தாத்தா அன்றாடம் கொடுக்கும் பணத்தை உண்டியல் சேமித்த வகையில் கிடைத்த ஆயிரம் ரூபாயை தேர்தல் நிதியாக அளித்தார்.
குழந்தையின் செயலில் நெகிழ்ந்த வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய் 4 வயது சிறுமியை உச்சி முகர்ந்து பாராட்டி சிறுமி அளித்த நிதியை பெற்றுக்கொண்டார்.