

வேட்பாளர், விஐபி.பேச்சாளர்களின் பிரச்சாரத்திற்காக கிராமங்களில் பல மணி நேரத்திற்கு முன்பாகவே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கிராமங்களின் அமைதி பாதிக்கும் நிலை உள்ளது.
தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளில் 74 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது முதற்கட்டப் பிரச்சாரங்களை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சமுதாயத் தலைவர்களை சந்தித்தல், சங்கங்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்களிடம் ஆதரவு கேட்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். மாலையில் கிராமப்பகுதி வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்துப் பிரச்சாரம் செய்கின்றனர்.
இதற்காக ஒருநாளைக்கு சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒருங்கிணைத்து பிரச்சார பயணத்திட்டம் வகுக்கப்படுகிறது. வேட்பாளர்கள் அல்லது விஐபி.பேச்சாளர்கள் அப்பகுதிக்கு வரும் போது திரளான கூட்டத்தை காட்டுதல், ஆரத்தி உள்ளிட்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்படுகினறன.
இதற்காக அக்கிராமத்தில் கட்சியினர் வருகையை உணர்த்தும் வகையில் ஸ்பீக்கர்களில் கட்சிப்பாடல்கள், பழைய சினிமா பாடல்கள், தலைவர்களின் பேச்சுக்களை ஒலிபரப்புகின்றனர். இவை பெரும்பாலும் பல மணி நேரத்திற்கு முன்பே துவக்கப்படுகின்றன.
கட்சியினர் பலரும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் வெகுநேரம் ஸ்பீக்கர்களின் அலறல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திரட்டப்பட்ட கூட்டத்தின் சோர்வைத் தடுக்கும் வகையில் அவ்வப்போது வேட்பாளர்களின் வருகை குறித்த கணிப்பு தகவல்களும் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளால் கிராமத்தின் அமைதி குலையும் நிலை உள்ளது.
சில நேரங்களில் ஒரே நாளில் ஒன்றிற்கும் மேற்பட்ட கட்சிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தின் வழியே நகர்வு பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன. அப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை அடுத்தடுத்த ஒலிபரப்புகளால் கிராமங்கள் பரிதவிக்கின்றன. குறிப்பாக முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே தேர்தல் பார்வையாளர்கள் இதுபோன்ற நீண்ட நேர பயன்பாட்டில் இருக்கும் ஒலிபெருக்கிகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.