

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பாஜகவுக்கு இம்முறை மக்கள் வாக்களிப்பார்கள் என்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “இதுவரை இல்லாத எழுச்சி மக்கள் மத்தியில் உள்ளது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பாஜகவுக்கு இம்முறை மக்கள் வாக்களிப்பார்கள்” என்றார்.
பணப் பட்டுவாடா குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “தாங்கள் விலைபொருளா, விலைமதிக்க முடியாதா பொருளா? என்று மக்கள் முடிவெடுப்பார்கள்” என்றார்.
மேலும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதற்காக மோடி, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா ஆகியோர் விரைவில் வர உள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற எச்.வசந்தகுமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி கரோனா தொற்றால் உயிரிழந்தார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.