

அரவக்குறிச்சியில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராகக் களம் காணும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, “அரவக்குறிச்சியில் தொழிற்சாலைகளே இல்லை. இதன் காரணமாக இங்குள்ள இளைஞர்கள் அருகிலுள்ள மாவட்டங்களில் வேலைக்குச் செல்கிறார்கள். இதன் காரணமாக இங்குள்ள கிராமங்களில் இளைஞர்களே இல்லை.
அதிமுக கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றவுடன் அரவக்குறிச்சியில் தொழிற்சாலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்” என்று அவர் உறுதி அளித்தார்.
தமிழகத்தில் மத்திய அரசுப் பணியிடங்களில் வட இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் அளிப்பதை அண்ணாமலை முதலில் தடுத்து நிறுத்தட்டும் என்று திமுகவினர் கூறிவருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ போட்டியிடுகிறார்.