

‘‘ஜல்லிக்கட்டைப் போல் பாரிவேட்டைக்கு அனுமதி பெற்றுத்தரப்படும்,’’ என திருப்பத்தூர் அதிமுக வேட்பாளரும், மாநில செய்தி தொடர்பாளருமான மருதுஅழகுராஜ் தெரிவித்தார்.
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருதுஅழகுராஜ், அமமுக வேட்பாளர் கே.கே.உமாதேவன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்துவிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்தபிறகு மருதுஅழகுராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர் தென்னரசு போட்டியிட்ட இத்தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு எழுத்தாளரான எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
திருப்பத்தூர் தொகுதியில் தொடர்ந்து 15 ஆண்டுகளில், 5 ஆண்டுகள் அமைச்சராகவும், 10 ஆண்டுகள் எம்எல்ஏவாகவும் இருந்த கே.ஆர்.பெரியகருப்பன் ஒரு கல்லூரியோ, பாலிடெக்னிக் கல்லூரியோ கொண்டு வரவில்லை. மேலும் திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நீண்ட காலமாக நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்காததால் உவர்ப்பு நீரையே இன்றும் மக்கள் குடிக்கும் நிலை உள்ளது.
சிவராத்திரியில் இப்பகுதி மக்கள் பாரம்பரியமாகக் கடைபிடித்து வரும் பாரிவேட்டைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டை போன்று பாரிவேட்டைக்கும் அனுமதி பெற்று தருவேன்.
தொழில் வளம் மிகுந்த பகுதியாக இருந்த சிங்கம்புணரி தற்சமயம் நலிவடைந்த பகுதியாக மாறிவிட்டது. அங்கு பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் கயிறு தொழிற்சாலை அமைக்கப்படும். பிரான்மலை பகுதியில் தோட்டக்கலை, சிறுதானிய பயிர்களைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பேன். திருப்பத்தூர் தொகுதியில் ஏராளமான இளைஞர்கள் புலம்பெயரும் தமிழர்களாக வெளிநாட்டு வேலைக்குச் செல்கின்றனர்.
அவர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். பள்ளத்தூர், கானாடுகாத்தான் பகுதியில் பாரம்பரிய கட்டிட கலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்.
இத்தொகுதியில் வெற்றி பெற்ற ராஜகண்ணப்பன், பெரியகருப்பன் ஆகியோர் அமைச்சராக இருந்தும், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கவில்லை. அதை சிங்கம்புணரி, திருப்பத்தூர் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன், என்று கூறினார்.