திண்டுக்கல் நகரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
திண்டுக்கல் நகரில் நேற்று இரவு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
நாமக்கல், கரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் வந்தடைந்தார்.
மாவட்ட எல்லையில் இவருக்கு திமுகவினர் வரவேற்பளித்தனர். தொடர்ந்து திண்டுக்கல் வந்தவர், அண்ணா சிலை அருகே காரைவிட்டு திடீரென இறங்கி நடந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின் பொதுமக்களுடன் நடந்து சென்ற ஸ்டாலின் மக்கள் கவனத்தை ஈர்த்தார். மக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். சிலர் கைகுலுக்கி மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து கடைவீதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சுற்றிவந்து வியாபாரிகள், பொதுமக்களிடம் ஆதரவுதிரட்டினார். அவருடன் திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திமுக மாவட்ட செயலாளர்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி ஆகியோர் நடந்து சென்று வாக்குசேகரித்தனர்.
வழிநெடுகிலும் மக்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு தனியார் ஓட்டலில் தங்குவதற்கு சென்றார்.
இன்று காலை வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட வடமதுரையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசுகிறார்.
